search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு கேமராக்கள்"

    கோவை மாநகரில் உள்ள சிக்னல்களில் பழைய கேமராக்களை அகற்றிவிட்டு புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
    கோவை:

    கோவை மாநகரில் உள்ள சிக்னல்களில் பழைய கேமராக்களை அகற்றிவிட்டு புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அவை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை என்று போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

    கோவை மாநகர பகுதியில் அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு ஆகியவை முக்கிய ரோடுகள் ஆகும். இந்த ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிப்பதற்காகவும், குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இந்த கண்காணிப்பு கேமராக்கள் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை மாநகர பகுதியில் போக்குவரத்தை எளிதில் கண்காணிப்பதற்காக கோவை மேற்கு, கோவை கிழக்கு என்று இருபிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் கோவை மேற்கு பகுதியில் 28 சிக்னல் களும், கிழக்கு பகுதியில் 28 சிக்னல்களும் உள்ளன. இதுதவிர மஞ்சள் விளக்குகள் மட்டும் ஒளிரக்கூடிய சிக்னல்கள் பல உள்ளன.

    இந்த சிக்னல்களில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் கோவை அவினாசி ரோடு எல்.ஐ.சி. சிக்னல், அண்ணா சிலை சிக்னல், லட்சுமி மில் சிக்னல் உள்பட 5 சிக்னல்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்து பழுதாகி விட்டன.

    அந்த சிக்னல்களில் இருந்த பழைய கண்காணிப்பு கேமராக்களை அகற்றிவிட்டு புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அந்த கேமராக்கள் மிகவும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

    புதிய கண்காணிப்பு கேமராக்களும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப் பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் புதிதாக சிக்னல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சென்னை நகரம் முழுவதும் வழிப்பறி மற்றும் கொள்ளையை தடுக்க இதுவரை 2 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #CCTVCameras

    சென்னை:

    கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    போலீஸ் கமி‌ஷனராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்ற பிறகு சென்னை நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை துரிதப்படுத்தினார்.

    அதன் பேரில் சென்னை மாநகரம் 100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பாதுகாப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். பல இடங்களில் பொதுமக்களே முன் வந்து தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகிறார்கள். போலீசாரும் அவர்களின் கேமரா பொருத்தும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கேமரா பொருத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள்.

    முக்கிய சாலைகளில் குறைந்தபட்சம் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேமரா பொருத்துவது தொடர்பாக அனைத்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்தை சீர் செய்யும் இடங்களை சுற்றியுள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் பயனாக சென்னை மாநகரில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்பவர்களும் சிக்குகிறார்கள். போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகனங்களின் எண்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து அவர்களின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கேமராக்கள் மூலம் குற்றவாளிகளும் சிக்குகிறார்கள். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் சிக்னல் அருகே சில தினங்களுக்கு முன்பு ஒரு கொலை நடந்தது. அந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்காக ஆய்வு செய்த போது வடமாநில வாலிபரை சிலர் தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதுபோல பல்வேறு குற்ற செயல்களில் துப்பு துலக்குவதற்கு கேமராக்கள் உதவியாக உள்ளன.

    குற்றவாளிகளுக்கு வைக்கும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தவறு செய்யும் போலீசாரும் சில நேரங்களில் சிக்குகிறார்கள். சமீபத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் மது அருந்தி பணிக்கு வந்திருப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு கூறி இருந்தார். அது பொய்யான குற்றச்சாட்டு என்பது கண்காணிப்பு கேமரா மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த போலீஸ்காரர் ஒரு பைக்கில் செல்லும் போது இன்ஸ்பெக்டர் அவரை தள்ளி விட்ட காட்சி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை நகரம் முழுவதும் இதுவரை 2 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன் சாவடி சந்திப்பில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை உள்ள இடங்களில் 12.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நேற்று 443 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. #CCTVCameras
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் பொருத்தப்பட்டு உள்ளன.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. கடந்த 1848-ம் ஆண்டு தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. பூங்காவில் ஆண்டுதோறும் சராசரியாக 1,250 மில்லி மீட்டர் மழை பெய்யும். கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 250 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. பூங்காவின் மொத்த பரப்பளவு 22 ஹெக்டேர் ஆகும். இயற்கை எழில் மிகுந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    உள்நாடு மட்டுமல்லாமல், மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பூங்காவை பாதுகாக்க சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. பூங்காவில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் உயரமாக வளர்ந்து இருக்கிறது. இது பூங்காவுக்கு அழகு சேர்க்கிறது. நடைபாதைகளில் நடந்து சென்றபடியே ஜப்பான் பூங்கா, பெரணி இல்லம், மலர் மாடம், பெரிய புல்வெளி மைதானம், இலைப்பூங்கா, இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை பிறை சந்திரன் வடிவம் உள்ள அல்லி குளம், காட்சி முனை, அழகான வண்ண மலர் பாத்திகள் போன்றவற்றை காணலாம்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பாதுகாப்பு கருதி நுழைவு வாயில், பூங்கா அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது மரங்கள் முறிந்து விழுந்ததால் கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தன. மேலும் பூங்காவில் சுற்றித்திரியும் குரங்குகள் கேமராக்களில் இணைக்கப்பட்டு இருக்கும் ஒயர்கள் மீது ஏறி அங்கும், இங்கும் தாவி விளையாடுகின்றன. சில நேரங்களில் ஒயரை கடித்து இணைப்பை துண்டிக்கிறது. இதனால் கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தும், இணைப்பு இல்லாமலும் காணப்பட்டன.

    அதனை தொடர்ந்து கேமராக்களை புதுப்பித்து மீண்டும் பொருத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டது. அதன்படி தற்போது பூங்காவில் குரங்குகளால் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒயர்கள் சரிசெய்யப்பட்டு இருக்கிறது. மரங்கள் வழியாக ஒயர்கள் கேமராக்களுக்கு செல்லாமல், பூமிக்கடியில் பதிக்கப்பட்டு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு 16 கண்காணிப்பு கேமராக்கள் புதுப்பிக்கப்பட்டு கண்ணாடி மாளிகை, பெரிய புல்வெளி மைதானம் போன்ற இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் காட்சிகள் பதிவாவதோடு, அதனை அலுவலகத்தில் உள்ள கணினியில் நேரடியாக பார்க்கலாம்.

    கோடை சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடியும். 
    செய்யாறு கோர்ட்டில் ரூ.15 லட்சத்தில் 42 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆய்வு செய்தார்.
    செய்யாறு:

    செய்யாறு டவுன் ஆற்காடு சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் ரூ.86 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி செய்யாறு ஒருங்கிணைந்த கோர்ட்டில் ரூ.15 லட்சத்தில் 42 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி கோர்ட்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் ராஜ்மோகன், சுந்தரபாண்டியன், ஜெயஸ்ரீ உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    வடமணப்பாக்கம் கிராமத்தில் மழையினால் வீடு இடிந்து விழுந்து பிரியாமணி (வயது 7) என்ற சிறுமி பலியானார். இதையறிந்த மாவட்ட முதன்மை நீதிபதி அந்த கிராமத்துக்கு சென்று குடிசை வீட்டினை பார்வையிட்டு உறவினர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். மேலும் அங்கிருந்தவர்களிடம் குடிசை வீடுகளில் தங்க வேண்டாம், அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தங்க அறிவுறுத்தினார்.

    இதையடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெரும் துளசி என்பவரின் மனைவி லட்சுமி (37), மகள்கள் பிரியதர்ஷினி (15), தமிழ்பிரியா(3) ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த் துறை சார்பில் முதல் கட்டமாக ரூ.15 ஆயிரம் நிதியினை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் வழங்கினார்.

    அப்போது செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், வெம்பாக்கம் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
    குற்ற சம்பவங்களை தடுக்க நகரின் முக்கிய இடங்களில் ரூ.1 லட்சம் மதிப்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து விட்டதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஸ்ரீமுஷ்ணம் வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் ஸ்ரீமுஷ்ணம் நகரின் முக்கிய இடங்களில் ரூ.1 லட்சம் மதிப்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி ஸ்ரீமுஷ்ணம் காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதற்கு வர்த்தக சங்க தலைவர் சோக்கு சிவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் தங்க.பன்னீர்செல்வம் வரவேற்றார். அரிமா சங்க செயலாளர் பூவராகமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு கணினிகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன், வர்த்தகர் சங்க பிரமுகர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வர்த்தக சங்க பொருளாளர் தங்கராசு நன்றி கூறினார். 
    தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கார் மூலம் ரோந்து பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாநகரில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கார் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த காரில் கண்காணிப்பு கேமராவை இயக்கும் வல்லுனர்களும் இருப்பார்கள். அவர்கள் ரோந்து செல்லும் போது கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொண்டே செல்வார்கள். இதில் சந்தேகப்படும்படியான நபர்கள் தெரிந்தால் உடனடியாக போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வாகன ரோந்து தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு நடந்தது. தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கலந்து கொண்டு, கொடியசைத்து வாகன ரோந்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்து (தென்பாகம்), ரேனியஸ் ஜேசுபாதம் (மத்தியபாகம்), பார்த்தீபன் (வடபாகம்), சந்தனகுமார் (போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிகுமார், வேலாயுதம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறும்போது, தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பாதுகாப்பாக பொருட்கள் வாங்கி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட சிறப்பு ரோந்து வாகனம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், பொதுமக்கள் அதிகம் கூடும் 11 இடங்களில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதுபோன்று கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    திருட்டு வி.சி.டியை ஒழிக்க அனைத்து திரையரங்குகளிலும் தீபாவளிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பட அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #Piracy #CCTV
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள் - வெளி அரங்குகள் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வருகிற நவம்பர் 6-ஆம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். பொருத்தப்பட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பதிவு செய்யப்பட வேண்டும். வருகிற நவம்பர் 15-ந் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்படமாட்டாது.

    இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்கள் திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்படுவர். ஒவ்வொரு முறை திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.



    திரைப்படத்தினை காணவரும் பொதுமக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்

    தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். மேற்படி வி‌ஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும். திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும்

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #Piracy #CCTV #ProducersCouncil

    ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகிறது. கடந்த 5 மாதங்களில் பல்வேறு பணிகளை செய்துள்ளேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இந்த தேர்தலுக்கு பிறகு யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

    காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து, எனது தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 460 திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கூட்டணி ஆட்சியை நடத்துவது என்பது சவாலானது. தேர்தலுக்கு முன்பு, எங்கள் கட்சி தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைத்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தோம்.

    நான் ஆட்சிக்கு வந்தவுடன், வாக்குறுதிப்படி 24 மணி நேரத்திற்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குறை கூறியது. சுமார் ரூ.43 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளேன். கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.10 ஆயிரத்து 300 கோடியை தள்ளுபடி செய்து அதற்கான நிதியை ஒதுக்கிவிட்டோம்.

    விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு தேசிய வங்கிகள் ஒத்துழைக்க மறுக்கின்றன. இதில் அரசியல் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கடன் தள்ளுபடி திட்டத்தால் 44 லட்சம் விவசாயிகள் பயன் அடைகிறார்கள். நிதி பற்றாக்குறை இல்லை. கஜானா காலியாகிவிட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அரசு கஜானா நல்ல நிலையில் உள்ளது.

    கடன் தள்ளுபடி திட்டத்தால், மாநில அரசின் பொருளாதார நிலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்நாடகத்தின் பொருளாதார நிலை நல்ல நிலையில் உள்ளது. தேசிய வங்கி கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கி வைத்துள்ளேன். வருகிற 1-ந் தேதி முதல் தேசிய வங்கி விவசாய கடன் தள்ளுபடிக்கு பணத்தை செலுத்தும் பணி தொடங்கப்படும்.

    சமூக நலத்துறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ரூ.29 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களை குறித்த காலத்தில் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 38 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டு, பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசியை குறைத்தேன். ஆனால் காங்கிரசார், 7 கிலோ அரிசி வழங்குவதில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.2,000 கோடி நிதி தேவைப்படுகிறது. அதையும் வழங்க தயாராக இருக்கிறேன். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

    பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.6,500 கோடி செலவில் வெளிவட்டச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் டெண்டர் விடப்படும். இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும். 60 மீட்டர் அகலம் அளவுக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    மேலும் நகரில் 102 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் ரூ.9,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என்று கணக்கிடப்படுகிறது. காற்று மாசுபாடு குறையும். மக்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் தடுக்கப்படும். இந்த திட்டமும் அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கப்படும்.

    பெங்களூருவில் தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சார கட்டணமாக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலுத்தப்படுகிறது. தெருக் களில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தினால் இந்த கட்டணம் ஆண்டுக்கு ரூ.15 கோடியாக குறையும். இந்த எல்.இ.டி. விளக்குகளை பொருத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    தகுதி அடிப்படையில் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகளை அடக்கவும், சூதாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போலீஸ் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்.



    பெங்களூருவில் ஆயுதபூஜை அன்று ஆயுதங்களை வைத்து பூஜை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னட அமைப்பின் தலைவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரூ.2,000 கோடி செலவில் பெங்களூரு மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குடகு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை அரசு செய்து கொடுக்கிறது.

    வீடுகளை இழந்த மக்களுக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வந்த உதவித்தொகை குடகு மழை வெள்ள பாதிப்புகளுக்கு மட்டுமே செலவிடப்படும். கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் கட்டப்படும்.

    மாநிலத்தில் பொதுப்பணித்துறையில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு பல்வேறு சாலை திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். கர்நாடகத்தில் மாணவ -மாணவிகள் குளங்கள் மற்றும் ஆறுகளை கடக்க வசதியாக 470 சிறு நடை பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்படும். எனது தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது கடவுள் கொடுத்த அதிகாரம். கர்நாடகத்தை காப்பாற்றவே நாங்கள் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம்.

    இடைத்தேர்தல் நடை பெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இந்த வெற்றி, அடுத்து நடைபெற உள்ள 3 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவித்துள்ளோம். அந்த பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூற முடியாது. கர்நாடகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு கர்நாடக அரசால் பாதுகாப்பு வழங்க இயலாது. இது கேரளா மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்த மாநில விவகாரங்களில் தலையிட முடியாது. ‘மீ டூ‘ இயக்கம் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. கல்வி கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவதில் அரசின் நிலையை விரைவில் தெரிவிப்போம்.

    ஜனதா தரிசனம் மூலம் 17 ஆயிரத்து 723 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 50 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக திறன் அடிப்படையில் 3 பல்கலைக்கழகங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு பள்ளி-கல்லூரி கட்டிடங் களை சீரமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மைசூரு தசரா விழாவை காண 50 லட்சம் பேர் மைசூருவுக்கு வந்தனர். தசரா ஊர்வலத்தை மட்டும் 12 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy

    திண்டிவனம் நேரு வீதியில் புதிதாக பொருத்தப்பட்ட 50 கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் சி.வி.சண்முகம் இயக்கி வைத்தார்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திண்டிவனம் நேரு வீதியில் ரூ.13 லட்சம் செலவில் 50 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் வரவேற்றார்.



    சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு நேரு வீதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இயக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், திண்டிவனம் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகங்கள், கடைகள் அதிகளவில் உள்ள நேரு வீதியில் தற்போது கூடுதலாக 50 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் திண்டிவனம் நகர முக்கிய சாலைகளில் ரூ.15 லட்சம் செலவில் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீத்தாபதி சொக்கலிங்கம், டாக்டர் மாசிலாமணி, அ.தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் தீனதயாளன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு எஸ்.பி.ராஜேந்திரன், மேற்கு கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் பன்னீர், ஒப்பந்ததாரர்கள் சுப்பிரமணியன், டி.கே. குமார் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு நன்றி கூறினார்.
    திருச்சி மாநகராட்சி பகுதியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் நடவடிக்கையில் மாநகர காவல் துறை ஈடுபட்டு வருகிறது.
    மலைக்கோட்டை:

    திருச்சி மாநகராட்சி பகுதியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் நடவடிக்கையில் மாநகர காவல் துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் வியாபாரிகளின் பங்களிப்புடன் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக காவல் துறை -வியாபாரிகள் இடையேயான ஆலோசனை கூட்டம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோட்டை, காந்தி மார்க்கெட், தில்லைநகர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது துணை கமி‌ஷனர் மயில்வாகனன் கூறியதாவது:-

    பொதுமக்கள் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வியாபாரிகள் தங்கள் கடை முன்பு ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. அப்படியே கடைமுன்பு வேறு யாராவது ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் போலீசில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்சி மாநகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஏற்கனவே உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் தவிர, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் வியாபாரிகள் மற்றும் காவல்துறை சார்பில் பொருத்தப்பட உள்ளது.

    எனவே வியாபாரிகள்- பொதுமக்கள் சமூக அக்கறையுடன் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான என்.எஸ்.பி. ரோடு, சத்திரம் பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    கூட்டத்தில்உதவி கமி‌ஷனர்கள் பெரியண்ணன், ராமச்சந்திரன், விக்னேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஞானசேகர் மற்றும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்டவைகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ×